முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேதின விழாவை பேரெழுச்சியுடன் கொண்டாடுவோம்-மார்க்சிட் கம்யூ. வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 1 - உழைக்கும் வர்க்கத்தின் உரிமை தினமாம் மே நாளையொட்டி தமிழக மக்களுக்கு சி.பி.எம். கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து  கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
மார்க்சிட் கம்யூனிட் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது. உலகம் 126-வது மே தினவிழாவை பேரழுச்சியுடன் கொண்டாடுகிறது. அமெரிக்காவின் நிதி வர்த்தகத் தலைமை பீடத்தில் துவங்கிய பொருளாதார நெருக்கடி மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் தன்னைக் காத்துக் கொள்ள உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நடைபெறும் மே தினவிழா தொழிலாளி வர்க்கத்துக்கு எழுச்சியூட்டக்கூடியது ஆகும்.
பன்னாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம் என்ற தாரக மந்திரத்தால் இயக்கப்படும் நிதி மூலதனமும், அந்த நிதி மூலதனத்தின் வேட்கைக்காக எண்ணெடீநு வளமிக்க லிபியா போன்ற நாடுகளை தாக்குவது உள்பட உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிக்க மேலை நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் இளைய கூட்டாளியாக தங்களை பிணைத்துக் கொள்ள முனைகிறது, மேலும் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை பல்வேறு முனைகளில் கூர்மைப்படுத்தியுள்ளனர். சுமைப்பணி தொழிலாளர்களின் போராட்டம் முதல், விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் வரை எந்தவொரு தொழிலாளர் போராட்டத்தையும் ஒடுக்குவதற்கே முயற்சிக்கிறார்கள். உழைக்கும் மக்களின் நலன் காக்கும் சட்டங்களை சீர்குலைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை காக்கும் சட்டங்களை இயற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி நவீன தாராளமயக் கொள்கைகளை அனைத்து துறைகளிலும் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் இந்திய தொழில்களை சிதைக்கிறார்கள்; லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள்.
தமிழ்நாட்டின் தொழிலாளி வர்க்கமும் இந்த உண்மையை உணர்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் கொடுத்து கதவை திறந்துவிட்டது திமுக அரசு. நடுத்தர, சிறு, குறு தொழில்கள் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தது. வரலாறு காணாத மின்வெட்டு தமிழக தொழில்களை நாசமாக்கியுள்ளது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, பீடி, கயிறு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நலிந்து அதில் பணிபுரிந்தோர் வீதிக்கு தள்ளப்பட்டனர். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு எங்கும், எதிலும் ஒப்பந்த தொழிலாளர் முறை கொண்டு வரப்பட்டுவிட்டது. தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான சட்டம், சுமங்கலி திட்டம் என்ற நவீன கொத்தடிமை முறை அரசினால் ஊக்குவிக்கப்படுகிறது. சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்து கறாராக அமல்படுத்துதல், முறைசாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு, நல உதவிகளை அதிகரித்தல் என தமிழக தொழிற்சங்க இயக்கம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே தனது ஆட்சியை முடித்துக் கொண்டுவிட்டது திமுக அரசு. இந்தப் பின்னணியில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசு தமிழக தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டுமென மக்கள் விழைகிறார்கள்.
தமிழகத்தில் விவசாயத்தை பாதுகாக்க, தொழில்களை பாதுகாக்க, புதிய அரசு எடுக்கிற அனைத்து முயற்சிகளையும் வரவேற்போம். அந்நிய மூலதனத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்