முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை கொள்முதலை நிறுத்துவதா? முதல்வர் கண்டனம்

வியாழக்கிழமை, 30 மே 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே.31 - சர்க்கரை ஆலைகள் மீதான லெவி சர்க்கரை  கட்டுப்பாடுகளை ரத்து செய்வது போன்ற மத்திய அரசு எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்படி கட்டுப்பாடுகளை நீக்குவது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் பிரதமர்  மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசின் தற்போதய முடிவால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும், வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை அதிகமாக இருக்கும் என்றும், அதற்கும் பொது விநியோகத்தில் அளிக்கப்படும் சர்க்கரை விலைக்கும் இடையே பெரிய விலை வேறுபாடு ஏற்படும் என்றும், அதனால் அந்த ஒட்டுமொத்த தொகையையும் மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர்  ஜெயலலிதா, பிரதமர்  மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள  கடிதத்தின் விபரம் வருமாறு:-

சர்க்கரை ஆலைகள் மீதான வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை நீக்குவது, முறைப்படுத்தப்பட்ட விடுவிப்பு முறைகளின் கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இங்கு நான் குறிப்பிட விழைகிறேன். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பொதுப்பங்கீட்டு முறையின் வாயிலாக சர்க்கரை வழங்கும் நடைமுறையை பாதிப்பதோடு, இனிவரும் காலத்திலும் இது வறியவர்களின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனை பாதிக்கும் என்பதால் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தற்போது, மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு மாதமொன்றுக்கு 10,835 மெட்ரிக் டன் அளவு லெவி சர்க்கரையை மட்டுமே வழங்கி வருகிறது.  இது, பொதுப்பங்கீட்டு முறையின் கீழ் விநியோகம் செய்வதற்கு தேவைப்படும் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கே ஆகும்.  பொதுப்பங்கீட்டு முறையின் வாயிலாக, சர்க்கரை வழங்குவதற்கு, உதவித்தொகை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அதிகளவு  செலவு பிடிக்கிறது.  மத்திய அரசு கைவிடக்கருதியுள்ள இப்புதிய ஏற்பாட்டு முறையினால், வழங்குவதற்கு பொறுப்பேற்றுள்ள, ஒரு கிலோ லெவி சர்க்கரைக்கு ரூ.18.50 உதவித்தொகை மட்டுமே வழங்க இயலும், ஆனால்,  வெளிச்சந்தையில் நியாயவிலைக்கடை நிலையில் ஒரு கிலோ சர்க்கரையின் சில்லறை விற்பனை விலை ரூ.13.50 ஆகும்.  தங்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின்படி, மத்திய அரசின் இந்த உதவித்தொகை 2013 - 14 மற்றும் 2014 -2015 ஆம் நிதியாண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், இந்த ஏற்பாட்டு முறை 2014-2015 ஆம் ஆண்டிற்கு பிறகு கூட தொடருமா என்பது பற்றிய விரிவான தகவல் ஏதுமில்லை.   சர்க்கரை ஆலைகள் மீதான இந்த வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை திடீரென திரும்பப்பெறுவது, வெளிச்சந்தையில் ஒரு தடுமாற்றத்தை உண்டாக்குவதோடு  பொதுப்பங்கீட்டு முறையில், சர்க்கரை வழங்கும் முறையில் தாக்கத்தை உருவாக்கி ஓர் நிலையற்ற  தன்மையை ஏற்படுத்திவிடும்.  மேலும், வெளிச்சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.32க்கும் அதிகமாக ஏறுகிறபோது, மாநில அரசு தான் இதனை ஏற்கவேண்டியுள்ளது.  ஏற்கனவே, பெருமளவில் உதவித்தொகை வழங்கும் வகையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இச்சுமை இன்னும் வெகுவாக அதிகரிக்கும்.  வறியவர்கள், பொதுப்பங்கீட்டு முறையின் வாயிலாக, ஏற்கக்கூடிய விலையில்,  சர்க்கரை வாங்க வகைசெய்வதற்கு, மாநில அரசானது ஒட்டுமொத்த சர்க்கரையை வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. 

சர்க்கரை மீதான வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து, உணவு மற்றும் பொதுப்பங்கீட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ள  தற்போதைய முடிவானது, சர்க்கரை வாங்குவதற்கு பொதுப்பங்கீட்டு முறையை முழுவதுமாக நம்பியிருக்கும் வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனில் கடுமையான தாக்கத்தை இது உண்டாக்கும்.  எனவே, சர்க்கரை ஆலைகள் மீதான லெவி சர்க்கரை கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் மற்றும் பொதுமக்களின் அக்கறை கொண்டு  தற்போதுள்ள லெவி சர்க்கரை ஏற்பாட்டு முறையை தொடருமாறும் அல்லது சர்க்கரையின் வெளிச்சந்தை விலைக்கும் பொதுப்பங்கீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் வழங்கல் விலைக்கும் இடையே வேறுபடுகின்ற ஒட்டுமொத்த தொகையையும் மத்திய அரசு மானியமாக வழங்கவும், இந்த மானியத்தொகையை 2014-2015 ஆம் ஆண்டிற்கு பிறகும்  தொடர்ந்து வழங்கவும் உறுதியளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்