முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பிரதமராக இன்று நவாஸ் ஷெரீப் பதவியேற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 5 - பாகிஸ்தான் பிரதமராக இன்று நவாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொள்கிறார். இவர் பிரதமராக பதவியேற்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது. நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் கீழ் சபைக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அதாவது ஷெரீப் கட்சி சார்பில் 180 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இதனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது நவாஸ் ஷெரீப் கட்சி. இதையடுத்து இன்று பாகிஸ்தானின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கவிருக்கிறார் நவாஸ் ஷெரீப். இன்று அப்பதவிக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நவாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் சிறிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. 

இந்த சிறிய அமைச்சரவையில் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. இன்று பிரதமராக பதவியேற்கும் ஷெரீப் தன்னிடத்தில் வெளியுறவு விவகாரம் மற்றும் ராணுவ இலாக்காக்களை வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது அமைச்சரவையில் கிட்டத்தட்ட 20 அமைச்சர்கள் இன்று சேர்த்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். ரம்ஜான் மாதத்திற்கு பிறகு தனது அமைச்சரவையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறார் நவாஸ் ஷெரீப். இன்றைய அமைச்சரவையில் யார், யார் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற விபரத்தை ஷெரீப் கட்சி வெளியிடவில்லை. பல்வேறு காரணங்களுக்காக முதலில் சிறிய அமைச்சரவையை பதவியேற்க வைப்பது பிறகு அமைச்சரவையை விரிவுபடுத்துவது என்று திட்டமிட்டிருக்கிறார் நவாஸ் ஷெரீப். இந்த தேர்தலில் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி 2 வது இடத்தை பிடித்தது நினைவிருக்கலாம். புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் இன்று பதவியேற்கவிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காரணம், ஒரு காலத்தில் சர்வாதிகாரி முஷாரப்பால் கொடுமைக்கு ஆளானவர் நவாஸ் ஷெரீப். ஒரு கட்டத்தில் நாட்டை விட்டே துரத்தப்பட்டார் இவர். பின்னர் மற்றொரு சமயத்தில் இவர் நாடு திரும்பிய போது விமானத்தை விட்டு ஷெரீப்பை இறங்க கூட முஷாரப் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளான ஷெரீப் நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக இருக்கிறார். அது மட்டுமல்ல, இந்தியாவுடன் நல்லுறவை விரும்பும் தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன. அந்த பிரச்சினைகள் தீர்ந்த பிறகு பார்ப்போம் என்று கூறி நழுவிக் கொண்டு விட்டார் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்