தாவூத் - ஷகீல் உத்தரவுப்படி செயல்பட்ட கிரிக்கெட் வீரர்கள்

புதன்கிழமை, 5 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 6 - நிழலுலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் உத்தரவுப்படி ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியின் போது செயல்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர். இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத், ஷகீல் ஆகியோர் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜீத் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சூதாட்ட தரகர்களும் கைதாகி உள்ளனர். 

ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் நிழலுலக தாதாக்களுக்கு தொடர்பு உண்டு என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் போன்றவர்களின் உத்தரவுப்படி கிரிக்கெட் வீரர்கள் செயல்பட்டுள்ளனர் என்ற பரபரப்பு தகவலை டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது. 

ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகியோர் மீது மகராஷ்டிரா திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளுடன் இவர்கள் தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் சிறையும், ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீசாரால் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 

துபாய், பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சூதாட்ட தரகர்கள் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும் ஐதராபாத்தை சேர்ந்த சூதாட்ட தரகர் முகமது யாஹ்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு ஐ.பி.எல். அணியை சேர்ந்த வீரர்களுக்கும் ஸ்பாட் பிக்சிங்கில் தொடர்பு உள்ளது குறித்து விவரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: