கறுப்பு பணம்: ஸ்விஸ் வங்கிகளுக்கு மத்திய அரசு கடிதம்

புதன்கிழமை, 5 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 6 - ரகசிய கணக்கு விபரங்களை கேட்டு ஸ்விஸ் வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதங்கள் அனுப்பி உள்ளது. நிதி அமைச்சகத்துக்கு உட்பட்ட வருவாய் துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வரி மற்றும் வரி ஆராய்ச்சி பிரிவு பல்வேறு நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் ரகசிய கணக்கு விவரங்கள் மற்றும் பண பரிவர்த்தனை விவரங்களை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளது என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. 

இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, வரி விவர பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்களின் கீழ் ரகசிய கணக்கு விவரங்களை அளிக்குமாறு இந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக ஸ்விட்சர்லாந்துக்கு 232 ரகசிய கணக்கு விவரங்கள் கோரி கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. தனி நபர்களை பொருத்தவரை ஸ்விஸ் நாட்டின் வங்கிகளின் ரகசிய தன்மையை பயன்படுத்தி கறுப்பு பணத்தை பதுக்குகின்றனர். சில குறிப்பிட்ட நபர்கள் மீது நடைபெறும் விசாரணையில் ஸ்விஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கப்படுவது தெரியவந்துள்ளது. 

கடந்த நிதி ஆண்டில் 232 ரகசிய விவரங்களை கோரும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஸ்விட்ஸர்லாந்துடன் உள்ள ஒப்பந்தம் திருத்தப்பட்டதை தொடர்ந்து அதிகபட்சமான கோரிக்கை கடிதங்கள் சென்ற நிதி ஆண்டில்தான் அனுப்பப்பட்டன. ஸ்விட்சர்லாந்து தவிர ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 38 கணக்குகள் குறித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்படும் தகவல்களை வெளியிடுவதற்கு தடைகளும் கடும் நிபந்தனைகளும் உள்ளன. எனவே எந்தெந்த தனி நபர்கள், எந்த நிறுவனங்களின் கணக்கு விபரங்கள் கோரப்பட்டுள்ளன என்பதை வெளியிட நிதி அமைச்சக வட்டாரங்கள் மறுத்து விட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: