கடற்படை ரகசிய வழக்கு: ரவிசங்கரன் முறையீடு

புதன்கிழமை, 5 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன். 6 - கடற்படை ரகசியம் அம்பலமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் முக்கிய நபரான ரவிசங்கரன் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்த வேண்டும் என்ற முடிவுக்கு எதிராக முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய கடற்படையின் முன்னாள் தலைவரான அட்மிரல் அருண்பிரகாஷின் நெருங்கிய உறவினர் ரவிசங்கரன். இவர் கடற்படை ரகசியங்களை ஆயுத வியாபாரிகளுக்கு அளித்தார் என 2006 ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போது ரவிசங்கரன் இந்தியாவில் இருந்து தப்பி சென்று விட்டார். 

அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிய வந்ததும் வழக்கு விசாரணையை சந்திக்க அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் கடந்த 2007 ம் ஆண்டு சி.பி.ஐ. கோரியிருந்தது. 

பின்னர் டெல்லி நீதிமன்றத்தின் கைது உத்தரவின் அடிப்படையில் 2010 ம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த போதுமான ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ. சார்பில் இங்கிலாந்து அரசு வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாதிட்டார். விசாரணையை சந்திக்க ரவிசங்கரனை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று மாஜிஸ்திரேட் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இங்கிலாந்து உள்துறை செயலர் நாடு கடத்தும் உத்தரவில் கடந்த மே மாதம் 22 ம் தேதி கையெழுத்திட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக முறையிட ரவிசங்கரனுக்கு இரண்டு வார அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தன்னை நாடு கடத்த கூடாது என்று ரவிசங்கரன் நீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: