நல்லாட்சி வழங்குவதில் கவனம்: பதவியேற்ற ஷெரீப் சூளுரை

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன்.7  - பாகிஸ்தான் பிரதமராக பி.எம்.எல்.என். கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறையாக பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 42 எம்.பி.க்களை கொண்ட அவையில் நவாஸ் ஷெரீப்புக்கு 244 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட முந்தைய ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர் மக்தூம் அமீன் பாஹிமுக்கு 42 வாக்குகள் கிடைத்தன. இம்ரான் கட்சி வேட்பாளர் ஜாவேத் ஹோஷ்மி 31 வாக்குகள் பெற்றார். பிரதமராக நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாடாளுமன்ற அவை தலைவர் அயாஸ் சாதிக் அறிவித்தார். அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஷெரீப் பேசியதாவது, 

பாகிஸ்தான் இப்போது தீவிரமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இவற்றை எந்த ஒரு தனி அரசியல் கட்சியாலும் தீர்த்து விட முடியாது. இந்த சவால்களை சமாளிக்க ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மற்ற அரசியல் கட்சிகள் என்று அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்க வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. எனினும் நான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருக்க மாட்டேன். எனது குழுவினரும் அவ்வாறு இருக்க அனுமதிக்க மாட்டேன். 

எந்தவிதமான ஊழலையும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். பொறுப்புடமை நிலைநாட்டப்படும். இளைஞர்களிடையே காணப்படும் அதிருப்தி, ஊழல், பயங்கரவாதம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உலகளவில் பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நல்லாட்சி வழங்குவதில் எங்கள் கட்சி கவனம் செலுத்தும் என்றார். மேலும் பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஷெரீப் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆளில்லா விமான தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டறிந்து அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றார். 

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு திரும்பி வரலாறு படைத்துள்ளார் ஷெரீப். அவரது முந்தைய ஆட்சி 1999 ல் அப்போதைய ராணுவ தளபதி முஷாரப் மேற்கொண்ட ராணுவப் புரட்சி காரணமாக முடிவுக்கு வந்தது. அதன் பின் சில ஆண்டுகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார். பின்னர் மீண்டும் தாயகம் வந்து கடந்த மாதம் 11 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டு இப்போது பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். நாட்டின் 27 வது பிரதமரான அவர் மூன்றாவது முறையாக இப்பதவிக்கு வந்துள்ள முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: