முக்கிய செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: ஊட்டியில் திருவிழாக்கோலம்

திங்கட்கிழமை, 2 மே 2011      தமிழகம்
1ooty-3

ஊட்டி, மே.- 2 - மே தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஊட்டி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. உலக சுற்றுலா நகரமான ஊட்டியில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மே மாதத்தில் சமவெளிப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பத்தின் காரணமாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் மே மாதம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படும். ஆண்டுதோறும் தொழிலாளர்தினமான மே 1-ந் தேதி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மலர்காட்சிக்கு வருவது போல் காணப்படும். இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மே தினம் வந்ததால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்துள்ளது.  சனிக்கிழமை மட்டும் ஊட்டிக்கு 13 ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா ஸ்தலங்களை கண்டு மகிழ்ந்தந்து வந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு மே 1-ந் தேதியன்று ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சற்று குறைவுதான். இருந்தாலும் நேற்று மட்டும் சுமார் 23 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.
மே தினத்தை முன்னிட்டு ஊட்டிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என நம்பி இரவில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளை கட்டணம் வசூலிக்கலாம் என்று எண்ணி பகலில் வந்து ரூம் கேட்ட பயணிகளுக்கு அறை காலியில்லை என்று லாட்ஜ்களில் கூறிவந்தனர். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததாலும், சுற்றுலா வந்த பயணிகள் அனைவரும் பெரும்பாலும் தனி வாகனம் மூலம் ஊட்டியை சுற்றுப்பார்த்து விட்டு மாலையில் ஊர் திரும்பியதால் நிறைய லாட்ஜ்களில் அறைகள் காலியாகவே இருந்தது. அதிக கட்டணத்திற்கு ஆசைப்பட்டு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அறைகள் கொடுக்காமல் விட்டது தப்பு என்பதை பின்னர் தான் லாட்ஜ் நடத்துபவர்கள் உணர்ந்தனர்.
மே தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில்
சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என நினைத்து காவல்துறை சார்பில் வெளிமாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட போலீசாரை ஊட்டிக்கு பாதுகாப்பு பணிக்கு வரவழைத்திருந்தனர். ஆனால் போலீசாரின் எதிர்பார்ப்புக்கு மாறாக மே தினத்தில் ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. மொத்தத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஊட்டிக்கு 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளதால் ஊட்டி நகரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: