அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம்: இந்திய குழு

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன். 8 - அமெரிக்காவுடனான நட்புறவு கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றமடைந்துள்ளது என அந்நாட்டுக்கு சென்றுள்ள இந்திய எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.  இந்திய எம்.பி.க்கள் குழு மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி.க்கள் குழு சார்பில் பிஜூ ஜனதா தளம் எம்.பி. பாண்டா கூறியதாவது, 

இந்தியாவும், அமெரிக்காவும் தொழில் வர்த்தகம் அணுசக்தி ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றி வருகின்றன. பல துறைகளில் எதிர்பாராத அளவுக்கு பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவுடனான இந்திய உறவு பெரிய அளவில் முன்னேற்றமடைந்துள்ளது. 

எரிசக்தி உள்ளிட்ட சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் இரு நாட்டு பொருளாதார நிலையும் பெருமளவு உயரும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் கூட்டாக பணியாற்றுவதன் அவசியத்தையும் அமெரிக்கா அறிந்து கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் அடிப்படை வளர்ச்சி கூட்டமைப்பு பணிகள் குறித்து அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அமெரிக்க பயணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று பாண்டா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: