முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் தீவிரம்

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 9 - நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. அக்கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அளவில் முன்னிலைப்படுத்த மூத்த தலைவர் அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த பிளவு விரிவடைந்து வருகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டு வருகிறவர் எல்.கே.அத்வானி. முன்னாள் துணைப் பிரதமராக பதவி வகித்த இவர், கடந்த 2009 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் பா.ஜ.க. வால் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. பல கூட்டணிக் கட்சிகள், அரசை விட்டு வெளியேறி இருக்கின்றன. 

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க. வை ஆட்சியில் அமர்த்தி புகழ்பெற்றுள்ள நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக வரும் லோக்சபா தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வில் குரல் எழுந்தது. இந்தக் குரல் நாளடைவில் வலுவடைந்தது. இதனால் பிரதமர் பதவிக்கான கனவில் இருந்த அத்வானி கடும் அதிருப்தி அடைந்திருந்தார். இந்த அதிருப்தியின் உச்சகட்டமாக பா.ஜ.க. வின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், தேசிய செயற்குழுக் கூட்டம் ஆகியவற்றை அத்வானி மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும் கூட புறக்கணித்திருக்கின்றனர். இதனால் கடுப்பாகிப் போன மோடி ஆதரவாளர்கள் டெல்லியில் அத்வானியின் வீட்டு முன்பு திரண்டு கண்டனப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இது பா.ஜ.க. வில் பிளவு விரிவடைந்து வருவதை பகிரங்கப்படுத்தியும் இருக்கிறது.

 பா.ஜ.க. வில் எல்.கே. அத்வானிக்கு ஆதரவாக சுஷ்மா ஸ்வராஜ், ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த் சின்ஹா, உமாபாரதி, அனந்த்குமார், நிதின் கத்காரி, ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதில் அத்வானி, ஜஸ்வந்த்சிங், உமாபாரதி ஆகியோர் கோவா கூட்டத்தைப் புறக்கணித்திருக்கின்றனர். மோடி முகாம் நரேந்திர மோடி முகாமில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஸ்மிர்த்த இரானி, அமீத் ஷா ஆகியோர் இருக்கின்றனர். இப்படி அத்வானி ஆதரவாளர்களின் அதிருப்தி தொடரும் நிலையில் மோடியை லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக ராஜ்நாத்சிங் கோவாவிலேயே அறிவிப்பாரா? அப்படி அறிவித்தால் அத்வானி அணி என்ன செய்யும்? அத்வானி அணியின் எதிர்ப்புக்கு பணிந்து மோடியை முன்னிறுத்துவதை ஒத்திப்போடுவாரா ராஜ்நாத் சிங்? என தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு வரும் நாட்களில் விடை தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்