முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க பாரிக்கர் ஆதரவு

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, ஜூன். 9  - வரப் போகும் லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாரதிய ஜனதா கட்சி தேர்தலை சந்திக்க கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் பா.ஜ.க. வின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் மற்றும் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தை பா.ஜ.க. வின் மூத்த தலைவர்கள் அத்வானி, ஜஸ்வத்சிங், உமாபாரதி உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்படுவதை எதிர்த்தே இந்த மூத்த தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கோவா மாநில ஆளும் பா.ஜ.க. முதல்வர் மனோகர் பாரிக்கர், நரேந்திர மோடியை முன்னிறுத்தி லோக்சபா தேர்தலை பாரதிய ஜனதா எதிர்கொள்ள முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே மனோகர் பார்க்கர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு எல்.கே.அத்வானியை ஊசிப் போன ஊறுகாய் அத்வானி என்றும் அவரது ஆட்டம் முடிந்து போன ஒன்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். 

தற்போது மோடியை கடுமையாக அத்வானி எதிர்ப்பதால் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மனோகர் பாரிக்கர். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆட்சி நிர்வாகத் திறமையால் நரேந்திர மோடி புகழ்பெற்றிருக்கிறார். அவரை முன்னிறுத்துவதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி கூடுதல் பலம் பெறும். மக்களின் கருத்தும் கூட பா.ஜ.க. வின் தேர்தல் முகமாக நரேந்திர மோடி இருக்க வேண்டும் என்பதுதான். அவரைத்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்தான் கட்சியின் தேர்தல் முகம். இந்தக் கருத்தை தெரிவித்ததும் மக்கள்தான்.. பொதுமக்களின் கருத்து என்பது நரேந்திர மோடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கின்றன. இதற்காக பா.ஜ.க. ஒரு கால அட்டவணையை உருவாக்க வேண்டும். யாரை தேர்தலில் முன்னிறுத்தப் போகிறோம் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே செய்ய வேண்டும். கோவா மாநிலத்தில் நான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கட்சியின் முகமாக நான் அறியப்பட்டிருந்ததால் ஆட்சியில் அமர முடிந்தது. 543 எம்.பி. க்கள் கொண்ட லோக்சபாவில் ஆகக் குறைந்தது 210 இடங்களைப் பெற வேண்டும். இல்லையெனில் ஆட்சி அமைக்க முடியாது. மோடியை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால் பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 220 இடங்களுக்கும் அதிகமாகவே பெற முடியும். கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் மோடி நல்ல நிர்வாகத்தைக் கொடுத்திருக்கிறார். அவரது நல்ல நிர்வாகத் திறனை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர்களும் கூட பாராட்டுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் கோவா செயற்குழுக் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிகிறது. ஆனால் 380 செயற்குழு உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு அதன் பின்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி இறுதி முடிவெடுப்பார்கள் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்