முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் பதவி காலி: காங்.

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.9 - வரும் லோக்சபை தேர்தலில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அதிகப்பட்சமாக எம்.பி.தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவி பறிக்கப்படும் என்று காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு கட்சி மேலிடம் கடுமையான எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஊழலால் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் ஊழல், ஆதர்ஸ் சொசைட்டி ஊழல் ஆகியவைகளால் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் லோக்சபை தேர்தலில் அந்த கட்சிக்கு தோல்வி ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதை மெய்பிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தொகுதிகள் அனைத்திலும் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. இதனால் பயந்துபோன காங்கிரஸ், தம் கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், கட்சி மேல்மட்ட தலைவர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. அப்போது வரும் லோக்சபை தேர்தலில் அதிகப்பட்சமாக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பதவி பறிக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டில் தற்போது 15 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் 2 மாநிலங்களில் கூட்டணி அரசும் உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா 5 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

காங்கிரஸ் முதல்வர்கள் உள்ள மாநிலங்களில் கட்சியானது அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். காங்கிரஸ் முதல்வர்களின் செயல்பாடுகளில்தான் மத்தியில் ஆட்சி மீண்டும் அமைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று முதல்வர்களிடத்தில் காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் மாற்றப்படமாட்டார்கள் என்ற சூழ்நிலையும் உருவாகி இருப்பதால் ஆந்திரா, கேரளா, அரியானா,மகாராஷ்டிரா, கேரளா, அசாம், உத்தரகாண்ட் ஆகிய மாநில காங்கிரஸ் முதல்வர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்