Idhayam Matrimony

காம்பீர் அணியிடம் வீழ்ந்தது கில்கிறிஸ்டின் பஞ்சாப் அணி

திங்கட்கிழமை, 2 மே 2011      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, மே - 2 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஐ.பி.எல். போட்டித் தொடரின் 37-வது போட்டியில் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் பால் வல்தாட்டி ஆகியோர் களமிறங்கினர். ஆனால் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத கொல்கத்தா ஆடுகளத்தில் ரன் எடுக்க துவக்க ஆட்டக்காரர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் கில்கிறிஸ்ட் வேகப்பந்து வீச்சை சமாளித்து  தனது வழக்கமான அதிரடி மூலம் ஓரளவு ரன்களைச்  சேர்த்தார். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுவந்தார் காம்பீர். இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அதுவரை அதிரடியாக ஆடாத வல்தாட்டி, யூசுப்பதானின் பந்தை தூக்கி அடித்தார். ஆனால் பந்து  நேராக மனோஜ் திவாரியின் கையில் கேட்ச்சாக மாறியது. அப்போது பஞ்சாப் அணி 4.3 ஓவர்களில் 32 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக மார்ஷ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 40 ஆக இருந்தபோது மார்ஷ் 5 ரன்களே எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இந்த நிலையில் ஓரளவு நல்ல முறையில் ஆடிக்கொண்டிருந்த கில்கிறிஸ்ட், சுழற்பந்து வீச்சாளர் இக்பால் அப்துல்லா விக்கெட்டிற்கு நேராக வீசிய பந்தை சரியாக கணிக்காமல் மட்டையை சுழற்ற அந்த பந்து மட்டையில் படாமல் கில்கிறிஸ்ட்டின் கால்களுக்கு இடையில் சென்று விக்கெட்டை பதம்பார்த்தது. 27 பந்துகளில் 26 ரன்களை எடுத்த கில்கிறிஸ்ட் அவுட்டானது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அப்போது பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 7.5 ஓவர்களில் 44 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்துவந்த நாயரும் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ஹஸ்ஸி, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஓரளவு ரன்களை எடுத்தது. ஆனாலும் அதிரடியாக ரன் குவிக்க இவர்களாலும் முடியவில்லை.  இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 15 ஓவரில் 86 ஆக இருந்தபோது ஹஸ்ஸி, அப்துல்லாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிபுல் சர்மா கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் ஒன்று இரண்டாக ரன்களை சேர்க்க பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 117 ரன்களை எடுத்திருந்தபோது கார்த்திக் ரன் அவுட் ஆனார். இவர் 42 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து குமார் களமிறங்கினார். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டும் எடுத்தது. பிபுல் சர்மா ஆட்டமிழக்காமல் 16 ரன்களையும், குமார் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் இக்பால் அப்துல்லா 19 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், யூசுப் பதான் சிக்கனமாக பந்துவீசி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. துவக்க ஆட்டக்காரர்களாக காலிஸ் மற்றும் மோர்கன் ஆகியோர் களமிறங்கினர். அதிர்ச்சியளிக்கும் வகையில் காலிஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் பட்டின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் பஞ்சாப் அணி சற்று தெம்படைந்தது. அடுத்து மோர்கனுடன் கேப்டன் காம்பீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ரன்களைச் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 4.2 ஓவரில் 35 ரன்களை எடுத்திருந்தபோது மோர்கன், பட்டின் பந்திலேயே ஹாரிசால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 28. இவரை அடுத்து மனோஜ் திவாரி களமிறங்கினார். மனோஜ் திவாரியும் காம்பீரும் சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டனர். இவர்கள் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.   இதனால் கொல்கத்தா அணியின் இலக்கு எளிதானது. இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இந்நிலையில் 17.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 120 ரன்களை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய  வெற்றியைப் பெற்றது. காம்பீர் ஆட்டமிழக்காமல் 44 ரன்களையும், திவாரி 34 ரன்களையும் எடுத்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பாக பட் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய இக்பால் அப்துல்லா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 8 போட்டிகளின் முடிவில் 10 புள்ளிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்