முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பதவியிலிருந்தும் அத்வானி திடீர் ராஜினாமா

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.11 - குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி பா.ஜ.கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தார்அத்வானி. இது பாரதிய ஜனதா கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவர் 3 வது முறையாக குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது செல்வாக்கு பெருகத்தொடங்கியது. எனவே அவரை பிரதம வேட்பாளராக முன்னிலைப்படுத்தவும் சில பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். அதே நேரம் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு அக்கட்சியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. 85 வயதான அத்வானி பிரதமர் பதவியை அடைய பல சமயங்களில் முயன்றார். அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை. வாஜ்பாயிக்கு பிறகு எப்படியாவது பிரதமராகி விடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்டு வந்தார் அத்வானி. ஆனால் அந்த முயற்சியில் அவர் தோற்றதுதான் மிச்சம். பல வருடங்களுக்கு முன் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக ரதயாத்திரை நடத்தியவர் அத்வானி. இதனால் அவர் மதச்சார்புடைய தலைவர் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருந்தது. இதனால்தானோ என்னவோ அவரது பிரதமர் பதவிக்கனவு பலிக்கவில்லை. 

இந்த நிலையில்தான்  பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அத்வானி வரவே இல்லை. உடல்நிலையை காரணம் காட்டி செயற்குழுவை புறக்கணித்தார் அத்வானி. இதே செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அதாவது கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமனம் செய்யப்பட்டார். இது அத்வானி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும் மோடி ஆதரவாளர்களுக்கு  பெருமகிழ்ச்சியையும் கொடுத்தது. மோடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கட்சியின் மூத்த தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

ஆனால் அத்வானிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. மோடிக்கு பதவி கொடுத்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தனது கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக தொலைக்காட்சி சானல்கள் தெரிவித்தன. மோடிக்கு கொடுக்கப்பட்ட பதவி உயர்வு அவருக்கு பிடிக்க வில்லையாம், இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

கட்சியின்செயல்பாடு சமரசம் செய்யும் அளவுக்கு இல்லை. பாரதிய ஜனதா செல்லும் பாதையும் மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, அடல்பிஹாரி வாஜ்பாய், ஆகியோர் வகுத்த கொள்கைகள் இப்போது இருப்பதாக தெரியவில்லை.  இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்கள் தங்களைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். என்வே கட்சியின் இப்போதைய செயல்பாட்டுடன் என்னால் ஒத்துப்போகமுடியும் என்று தெரியவில்லை. கட்சி திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. எனவே அனைத்து நிலைகளிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன் இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாக சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்தது. அத்வானியின் இந்த முடிவு கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா பிளவு பட்டு விடுமோ என்று சிலர் அஞ்சுகிறார்கள். அத்வானியின் இந்த ராஜினாமா முடிவு பற்றி கருத்து கேட்டபோது அதற்கு பதிலளிக்க கட்சியின் மேலிடபிரதிநிதிகள் மறுத்து விட்டனர். காரணம் அவர்களே அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டனர். இதனால் பாரதிய ஜனதாவில் தற்போது மயான அமைதிதான் நிலவுகிறது. 

 

அத்வானி இல்லத்துக்கு  விரைந்த தலைவர்கள்

 

குஜராத் முதல்வர் மோடிக்கு அளிக்கப்பட்ட பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் பா.ஜ.க. தலைவர்கள்அதிர்ச்சி அடைந்தனர். லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மாசுவராஜ், கட்சியின்துணைத்தலைவர் அலுவாலியா, ஆகியோர் உடனடியாக அத்வானியின் இல்லத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கய்யாநாயுடு, பொதுச்செயலாளர் ஆனந்த்குமார், மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோரும் அத்வானி வீட்டிற்கு விரைந்து சென்றனர்.அதன் பிறகு விஜய் கோயலும் புறப்பட்டு சென்றார். இவர்கள் அத்வானியை சமாதானப்படுத்த முயன்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்