ஏர் இந்தியா விமானிகள் 6-வது நாளாக ஸ்டிரைக்

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Air india strike

 

புதுடெல்லி, மே 3 - ஏர் இந்தியா விமானிகள் நேற்று 6 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் சுமார் 800 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசும், ஏர் இந்தியா நிறுவனமும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து நேற்று 6 வது நாளாக இந்த வேலை நிறுத்தம் நீடித்தது. 

கொல்கத்தாவில் 12 ஏர் இந்தியா விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து வளைகுடா நாடுகளுக்கு விமான பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் விமானங்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்காசிய நாடுகளுக்கு சில ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்கள் மட்டும் நேற்று புறப்பட்டுச் சென்றன. கோழிக்கோடு-துபாய், கோழிக்கோடு-சார்ஜா, கொச்சி-சார்ஜா, திருவனந்தபுரம்-சார்ஜா விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மேற்காசிய நாடுகளுக்கு செல்லவேண்டிய 200 பயணிகள் தங்களது பயணத்தை ஒத்திவைத்தனர். இதேபோல டெல்லி, மும்பை, சென்னை ஆகிய விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. விமானிகளின் இந்த வேலை நிறுத்தத்தை டெல்லி ஐகோர்ட்டு தடை செய்துள்ளது. என்றாலும்கூட இந்த விமானிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்காக தண்டிக்கப்பட்டால் தாங்கள் சிறை செல்லவும் தயாராய் இருப்பதாக விமானிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: