அத்வானி விலகல் காங்.க்கு கூடுதல் பலம்: சித்தராமையா

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூன். 12 - பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அந்த கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியை தவிர்த்து மற்ற பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பனாஜியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதனால் மனவேதனை அடைந்துள்ள அந்த கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க அடிப்படை உறுப்பினர் பதவியை தவிர்த்து மற்ற பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது. 

இது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்றாலும் மூத்த தலைவரான அத்வானிக்கு இது போன்றதொரு நிலை வந்திருக்க கூடாது. இதன் மூலம் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது கண்கூடாக தெரியவந்துள்ளது. 

வருகிற மக்களவை தேர்தலில் இது எதிரொலிக்கும். பா.ஜ.க.விற்கு கடும் பாதிப்பு ஏற்படும். மோடியை பிரச்சார குழு தலைவராக நியமித்துள்ளது அந்த கட்சியில் உள்ள தலித்துகள், பழங்குடியின மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. எனவே இதுவும் காங்கிரசுக்கு மக்களவை தேர்தலில் கூடுதல் பலத்தை அளிக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: