முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை அருகே கூட்டுறவு வங்கிக்குள் துப்பாக்கி சூடு

திங்கட்கிழமை, 2 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை மே.3 - நெல்லை அருகே முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் வங்கி ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ளது தளபதி சமுத்திரம் கீழுர். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த கோபால் பிள்ளை மகன் விஜய சங்கர்(42), சிறுமளஞ்சியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் ராஜா(39) ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். மேலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரும் அங்கு இருந்துள்ளனர். நேற்று பகல் 12 மணியளவில் அம்பாசிடர் கார் ஒன்று வங்கிக்கு வந்துள்ளது. காரில் இருந்து முத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இறங்கியுள்ளார். அவர் நேராக வங்கிக்குள் புகுந்து அங்கிருந்த கேசியர் விஜய சங்கரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிளார்க் ராஜா அங்கு சென்று மர்ம நபரை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் மர்ம நபர் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து போன வாடிக்கையாள்கள் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் சுதாரித்துகொண்ட மர்மநபர் அங்கிருந்து அவர் வந்த காரிலேயே ஏறி தப்பி ஓடி விட்டார். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் வங்கி சுவற்றில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி. விஜயேந்திரபிதரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஊழியர்களை மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் பணத்தையோ, நகையையோ கொள்ளையடித்து செல்லவில்லை. பொதுமக்கள் திரண்டதால் மர்ம நபர் கொள்ளையடிக்காமல் தப்பி சென்றாரா என்பது தெரியவில்லை. இதற்கிடையே மர்ம நபர் வள்ளியூருக்கு அருகில் காரில் இருந்து இறங்கி தப்பி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற கார்டிரைவர் நாங்குநேரியை சேர்ந்த தாயப்பன் என்பவர் நாங்குநேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் போலீசாரிடம் மர்ம நபர் வாடகைக்கு அமர்த்தியதாகவும், தளபதி சமுத்திரம் சென்று வரவேண்டும் என்று கூறியதால் அங்கு சென்றேன்என்றும்  துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னையும் மிரட்டியதால் அவரை மீண்டும் வள்ளியூர் பகுதியில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது வாக்குமூலம் திருப்தியளிக்காததால் போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது காரில் வேறு யாரும் மர்ம நபர்கள் உடன்வந்திருந்தனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியது தெரிந்த பின்னரும் மர்ம நபரை மீண்டும் ஏன் காரில் ஏற்றிசென்றார் என்பதும் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அங்கு வந்ததாக தெரியவில்லை. எனவே அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு தனிபட்ட விரோதம் ஏதும் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். விஜய சங்கர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் அவரோடிருந்த ராஜா மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் வங்கி சுவற்றிலும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். மர்ம நபர் என்ன வகையை சேரந்த துப்பாக்கி பயன்படுத்தினார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்