நிலக்கரி சுரங்க ஊழல்: காங். முன்னாள் மந்திரி மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12 - மத்திய அரசு கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் ஒதுக்கீடு முறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. இந்த காலக்கட்டத்தில் 151 தனியார் நிறுவனங்கள், 68 நிலக்கரி சுரங்கங்களை பெற்றன. இதன் மூலம் 1,700 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. இதன் மதிப்பு 42 லட்சம் கோடியாகும். நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டிருந்தால் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். ஒதுக்கீடு செய்யப்பட்டதால் 1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் 10.67 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 11 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மார்ச் மாதம் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக அறிக்கை ஒன்றை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சட்ட மந்திரி அஸ்வினி குமார் திருத்தங்கள் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அஸ்வினி குமார் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த புதிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இந்நிலையில் இதுவரை நடந்த ஊழல்களில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்தான் மிகப் பெரிய ஊழலாக கருதப்படுகிறது. 

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிகள் சந்தோஷ் பக்ரோடியா, தாசரி நாராயணராவ், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்தார்தா, நவீன் ஜிண்டால் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நிலக்கரி அமைச்சக உதவியுடன் இந்த ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியதை தொடர்ந்து சி.பி.ஐ. இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய முன்னாள் நிலக்கரி துறை ராஜாங்க மந்திரியும், டைரக்டருமான தாசரி நாராயணராவ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் ஆகிய இருவர் மீதும் நேற்று சி.பி.ஐ. புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கு சி.பி.ஐ. பதிவு செய்துள்ள 12 வது வழக்காகும். இதில் தாசரி நாராயணராவும், நவீன் ஜிண்டாலும் ஏமாற்றி மோசடி செய்து சுரங்க உரிமம் பெற்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய ஊர்களில் 19 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெல்லியில் உள்ள நவீன் ஜிண்டாலின் நிறுவனத்தில் நீண்ட நேரம் சோதனை நடந்தது. அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. ஜிண்டாலின் சுரங்கங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் அதிக பலனடைந்தவர் நவீன் ஜிண்டால்தான். இவர் பல்வேறு பெயர்களில் 11 நிலக்கரி சுரங்கங்களுக்கு உரிமம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொத்து மதிப்பு தவறாக காட்டியும், முந்தைய சுரங்க ஒதுக்கீட்டுகளை மறைத்தும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அது போல தாசரி நாராயணராவ் சுரங்க ஒதுக்கீடு விஷயங்களில் தாராளமாக நடந்து கொண்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மீது புது வழக்கு பதிந்திருப்பதால் அவர்கள் மீதான பிடி இறுகியுள்ளது. அவர்கள் இருவரையும் அழைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: