மாவோயிஸ்டு தாக்குதலில் காயமடைந்த சுக்லா மரணம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.12 - கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் குண்டுக் காயமடைந்து உயிருக்கு போராடி வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல காங்கிரஸ் தலைவருமான வி.சி. சுக்லா நேற்று மதியம் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. சத்தீஷ்கர் மாநிலம் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஒரு மாநிலமாகும், இந்த் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் திடீர் திடீரென்று தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களையும், போலீசாரையும் பாதுகாப்பு படை வீரர்களையும் கொன்று குவித்து வருகிறார்கள், இவர்களை ஒடுக்க  மத்திய, மாநில அரசுகள் முயற்சித்தும் இது வரை பலன் கிட்டவில்லை. கடந்த மே மாதம் 25-ம் தேதி இம்மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்ற போது அங்கு வந்த மாவோயிஸ்டுகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ், மூத்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதலியார் உட்பட 27 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சரும்,  இம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவருமான விசி சுக்லா மற்றும் 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வி.சி. சுக்லா மறுநாள் ராய்ப்பூரிலிருந்து கூர்கயான் அருகே உள்ள மெதந்தா மெடிசிட்டி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 2 வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால் சிகிச்சை பலனின்றி வி.சி.சுக்லா நேற்று பிற்பகல் 2.38 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. 

அவரது மரணம் குறித்து மருத்துவமனை தலைவர் யத்தீன்மேதா கூறுகையில், சுக்லாவின் உடலில் பல்வேறு உறுப்புகளும் செயலிழந்துவிட்டன. கடுமையான குண்டுக்காயமும் முதுமையும் அவரது உயிரை பறித்து விட்டதாக தெரிவித்தார். மறைந்த சுக்லாவிற்கு  மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். 

முன்னதாக தீவிரவாதிகள் தாக்குதலில் குண்டுக்காயம் அடைந்த வி.சி. சுக்லா உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் மெதந்தா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு ஒரு வாரம் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் தொற்று ஏற்பட்டதன் காரணமாக பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்தது. அதற்கு முன்பும் அவருக்கு ஜப்தல்பூர் மருத்துவமனையில் குண்டுகளை அகற்றுவதற்காக ஒரு ஆபரேசன் செய்யப்பட்டதாம். அதன் பிறகு மெதந்தா மருத்துவமனைக்கு சுக்லா கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் மரணமடைந்தார். மறைந்த காங்கிரஸ் தலைவர் சுக்லா ஒரு பிரபல வழக்கறிஞரின் மகனாவார். இவரது தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகியும் கூட. சுக்லா 9 முறை லோக்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1957 ல் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சராக இருந்தவர். அதன் பிறகு 80 களில் வி.பி. சிங் பக்கம் சாய்ந்து ஜங்மோர்ச்சாவில் தன்னை இணைத்து கொண்டார். வி.பி.சிங் அரசிலும் இவர் மந்திரியானார். அதன் பிறகு சந்திரசேகர் அமைச்சரவையிலும் இடம் பெற்றார். அதன் பிறகு காங்கிரசுக்கு மீண்டும் தாவினார். அதையடுத்து பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம் பெற்றார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: