முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் பதவி ஏற்பு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.18 - மத்திய அமைச்சரவையை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாற்றி அமைத்தனர். 4 கேபினட் அமைச்சர்களும் 4 இணை அமைச்சர்களும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்துவைத்தார். 

இலங்கை பிரச்சினையை சாக்குப்போக்காக வைத்துக்கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது. ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு மற்றும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் விலகியது. தி.மு.க. மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பதவி விலகி விட்டனர். மருமகனுக்கு சலுகை காட்டிய குற்றச்சாட்டு காரணமாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து பவன் குமார் பன்சாலும் நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்டதற்காக சட்ட அமைச்சர் பதவியில் இருந்து அஸ்வினி குமாரும் ராஜினாமா செய்துவிட்டனர். மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர்கள் பி.சி.ஜோஷியும் மக்கானும் ராஜினாமா செய்துவிட்டனர்.  இந்த பதவிகள் காலியாக இருப்பதால் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்டுள்ளது.

இதனையொட்டி மத்திய அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. புதியதாக 8 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 4 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிஸ்ராம் ஓலா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ்,கே.எஸ்.ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணிக் ராவ் காவித், சந்தோஷ் சவுத்ரி, தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன்,ஜே.டி.சீலன் ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழா சுமார் 30 நிமிடத்திற்குள் முடிந்துவிட்டது. புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கேபினட் அமைச்சர்கள் சிஸ்ராம் ஓலாவுக்கு தொழிலாளர் நலத்துறை,கே.எஸ்.ராவுக்கு ஜவுளித்துறை, கிரிஜா வியாஸூக்கு நகர்ப்புற வறுமை ஒழுப்புத்துறை, ஆஸ்கர் பெர்னாண்டஸூக்கு நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய இணை அமைச்சர்களான சுதர்சன நாச்சியப்பனுக்கு வணிகம், தொழில்துறை,   

சந்தோஷ் சவுத்ரிக்கு சுகாதாரம், குடும்பநலம், ஜே.டி.சீலனுக்கு நீதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு ரயில்வே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்