முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மீட்பு பணி: அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 22  - உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழை காரணமாக கங்கை மற்றும் அதன் உப நதிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு சுற்றுலா வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆங்காங்கே சிக்கினர். 150 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை சில ஆயிரங்களை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் 10 ஆயிரம் ராணுவத்தினர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். 

விமான படையை சேர்ந்த 30 ஹெலிகாப்டர்களும், தரைப்படையை சேர்ந்த 12 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரழிவு மீட்பு படையினரும் நிவாரண பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை வரும் செவ்வாய்க் கிழமைக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு சார்பில் ரூ. ஆயிரம் கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநில அரசு ரூ. 10 கோடியும், பீகார், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மாநில அரசுகள் தலா ரூ. 5 கோடியும், குஜராத் அரசு ரூ. 2 கோடியும் நிதியுதவி அளித்துள்ளன. சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை உத்தரகாண்ட் வெள்ள நிவாரண பணிகளுக்காக நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்