முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உதவி போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கும்: ஐ.நா.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூன். 24 - சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா செய்யும் ராணுவ உதவி அங்கு மேலும் போர்க்குற்றங்கள் நிகழ வழிவகுக்கும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையத்தின் நிர்வாகி பாலோ பினிரோ கூறியதாவது, 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ உதவி அளிப்பது என்ற அமெரிக்க அரசின் முடிவு குறித்து ஐ.நா. விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் ராணுவ உதவி அங்கு மேலும் பிரச்சினைகளை உண்டாக்கும். அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்களை பெறும் கிளர்ச்சியாளர்கள் கூடுதல் உத்வேகத்துடன் சண்டையிடுவார்கள். 

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவி கூடுதல் ஆயுத பலம் போன்றவை தங்களுக்கு இருப்பதால் அதிபர் பஷார் அல் அஸாத் ராணுவத்தை எப்படியும் வென்று விடலாம் என்று கிளர்ச்சியாளர்கள் எண்ணக் கூடும். அதனால் அவர்கள் அமைதி பேச்சுவார்த்தையை புறக்கணிப்பார்கள். மேலும் கிளர்ச்சியாளர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் மனித உரிமை மீறலுக்கும் போர் குற்றங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும். 

எனவே சிரியாவில் அரசியல் ரீதியான அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாலோ. 

இந்நிலையில் ஜோர்டான், துருக்கியில் உள்ள படைத் தளங்களில் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு போர் விமானங்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை எதிர்கொள்ளும் யுக்தி குறித்து அமெரிக்க ராணுவத்தினர் கடந்த சில மாதங்களாக பயிற்சியளித்து வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக ராணுவ உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படும் என அண்மையில் ஒபாமா அறிவித்ததையடுத்து போர் பயிற்சிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு மற்றும் சிறப்பு ராணுவ படையினர் அளித்துள்ள பயிற்சியும் அதி நவீன ஆயுதங்களும் போர்முனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கிளர்ச்சிப் படை தளபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே சிரியா அதிபர் பஷார் அல் அஸாதின் ஆட்சியை அகற்ற பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கத்தார் தலைநகர் தோகாவுக்கு சென்றார். அங்கு நேச நாடுகளின் கூட்டு ராணுவ முயற்சியுடன் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய மனிதாபிமான உதவிகள் குறித்து வலியுறுத்தினார். சிரியாவில் விரைவில் புதிய அரசு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்