முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனுக்கும் தலிபான்களுக்கும் தான் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன். 24 - ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையில்தான் நடைபெறும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் கத்தாரில் தலிபான்களை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தியடைந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தார். 

இதையடுத்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான்கெர்ரி கர்சாயை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலாளர் கார்னே செய்தியாளர்களிடம் கூறுகையில், 

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில்தான் நடைபெறும். அதே நேரம் தலிபான்களின் பிடியில் உள்ள அமெரிக்க வீரர்களை பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து தலிபான்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்துவோம். தலிபான்களுடனான பேச்சுவார்த்தையின் போது குவாண்டனாமோ வளைகுடாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தலிபான்களை விடுவிப்பது குறித்து அவர்கள் கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிப்பது குறித்து முடிவு செயய முடியாது. இந்த அமைதி பேச்சுவார்த்தை மிகவும் கடினமாக இருக்கும். எனினும் ஆப்கனில் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்