முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்துவிட அரசு மனு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை,ஜூன் 26 - கர்நாடக அணைகளை கையகப் படுத்தி தமிழகத்துக்கு உரிய தண்ணீர்  திறந்து விடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒரு மனுவில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் செயல்படுத்துவதில்லை. காவிரி நதிநீர் பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பு மற்றும் இறுதி தீர்ப்புகள் வெளியாகி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பும் இது தொடர்பான எந்த உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை.

காவிரி நதியில் தமிழக அரசுக்கு சேர வேண்டிய உரிய நீரை திறந்து விடுவதில்லை. கடந்த ஆண்டு தர வேண்டிய 53.8 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் திறக்கப்பட வேண்டிய தண்ணீரையும் திறந்து விடவில்லை. இந்த நிலை நீடித்தால் தமிழக விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாகிவிடும். எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளை கையகப்படுத்தி நடுநிலையான ஆணையம் ஒன்றை அமைத்து அணைகளிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் தற்போது அமைக்கப்பட்ட காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவையும் கர்நாடகா செயல்ப டுத்தவில்லை. எனவே காவிரி நதி நீர் மேம்பாட்டு ஆணையத்தையும் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும். அதுவரையிலும் இந்த நடுநிலை ஆணையம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு மனு கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு குறித்ததாகும். 

கர்நாடக மாநிலத்தின் ஆலோசனைப்படி தான் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க காவிரி நதிநீர் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உத்தரவையும் செயல்படுத்தாமல் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை மதிக்காத வகையில் இருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்