முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிள்ளைகளுடன் சேர்ந்து பாடம் படிக்கும் குரங்கு

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மைசூர், ஜூன். 27 - மைசூரில் குரங்கு ஒன்று பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளிக்கு சென்று பாடம் படிக்கிறது. மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி இருந்த தாய் குரங்கு தனது பெண் குட்டி குரங்கை கிராமத்தில் அனாதையாக விட்டு விட்டு சென்று விட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி குரங்கை கிராமத்தில் வசிக்கும் மகாதேவப்பா, ரூபா தம்பதி எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். 

அதற்கு தினமும் பால், பழம், உணவு கொடுத்து பராமரித்தனர். பின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி விட்ட குரங்கிற்கு ராணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், தங்கள் பிள்ளையைப் போல் பேணி காத்து வருகிறார்கள். ரூபா சொல்லிக் கொடுக்கும் அனைத்தையும் தவறாமல் குட்டி குரங்கு ராணி செய்து வருகிறது. தினமும் காலை 6 மணிக்கு எழும் குரங்கு, மகாதேவப்பாவுடன் வயல்வெளிக்கு செல்கிறது. பின் காலை 8.30 மணிக்கு வீட்டிற்கு வருகிறது. ரூபாவின் பிள்ளைகள் குளிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து குளித்தபின் காலை உணவு எடுத்து கொள்கிறது. ரூபா மற்றும் அவரது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு செல்கிறது. மாலை வரை பாடசாலையில் இருந்தபின் ரூபாவுடன் வீடு திரும்புகிறது. பிள்ளைகள் பால், காபி குடித்தால், குரங்கிற்கு பால் கொடுக்கிறார்கள். அதை குடித்தபின், ரூபாவின் பிள்ளைகளுடன் வீட்டுப் பாடங்கள் செய்கிறது. தனது கையில் பேனாவை அழகாக பிடித்து, சொல்லிக் கொடுப்பதை நோட்டில் எழுதுகிறது. வாரம் முழுவதும் பாடசாலைக்கு செல்லும் குரங்கு, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ரூபாவுடன் வயல்வெளிக்கு செல்வது, மார்க்கெட்டுக்கு செல்வது உள்பட பல பணிகளில் ்ஈடுபடுகிறது. மாலை நேரத்தில் கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. மனிதர்கள் செய்யும் அனைத்து செய்கைகள் மட்டுமில்லாமல், அனைத்து குணங்களும் குரங்கு குட்டி ராணிக்கு இருப்பதால், ரூபா குடும்பத்தில் மட்டுமல்ல பிளுகலி கிராமத்தினரின் செல்லக் குழந்தையாக மாறியுள்ளது. கிராமத்தில் நடக்கும் கோவில் விசேஷம் மட்டுமில்லாமல், வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சியிலும் விருந்தாளியாக குடும்ப பாசத்துடன் கலந்துகொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்