முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன்.28  - உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச் சரிவை அடுத்து அங்கு பலர் சிக்கித் தவித்தனர். நேற்று காலையில் மழை நின்றது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சுமார் 100 பேரை மீட்டனர். காலநிலை மோசமாக இருந்தாலும் மீட்புக் குழுவினர் அதை பொருட்படுத்தாது உயிரைப் பணயம் வைத்து சிக்கித் தவித்தவர்களை மீட்டு வருகின்றனர்.

காலை நிலை சீராக இல்லாத நிலையிலும், மீட்புக் குழுவினர் தங்களது பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. கார்வால் பகுதியில் சிக்கித் தவித்த லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்ரிநாத், ஹர்ஸி ஆதிய பகுதிகளில் 

சிக்கிய 5 ஆயிரம் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர். மழை, வெள்ளம் காரணமாக கிராமவாசிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.

எனவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரை அரசு அனுப்பியுள்ளது.  பல்வேறு  இடங்களிலிருந்து, ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய பகுதிளுக்கு  4700 பஸ்கள் அனுப்பப்பட்டு யாத்ரீகர்கள் பஸ்கள் மூலம்  மீட்கப்பட்டு வருகின்றனர். யாத்ரீகர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக விஷேச ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. பல சாலைகள் பொறியாளர்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலத்தில் 892 சாலைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த 18 யாத்ரீகர்கள் எரிக்கப்பட்டனர். கேதார்நாத்தில் மட்டும் 200 சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் தெரியாத சிலரது மரபணு சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் இது உறவினர்களை அடையாளம் காண்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் பெரும்பாலான சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேதார்நாத் அருகிலுள்ள கவுசார் என்ற இடத்தில் டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர். சிலரது சடலங்கள்  பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக ருத்ராப்ரயாக் மாவட்ட கலெக்டர் திலீப் ஜவால்கர் தெரிவித்தார். ஹரித்வாரில் நடந்த மகா யக்ஞத்தில் இறந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். உத்தர்காசி, சிமோலி, ருத்ராப்ரயாக் ஆகிய மாவட்டங்களில்  5600 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேதார் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் நாங்கள் அனைவரையும் மீட்டுவிட்டோம் என்று விமானப் படை அதிகாரி ராஜேஷ் இசார் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குன்று பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் முக்கிய பொருள் கிடைத்துள்ளது. இதன்மூலம் அந்த ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை கண்டு பிடிக்க முடியும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்