முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மபுரி கலவர சேதம்: நஷ்டஈடு கேட்ட வழக்கு தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - திவ்யா - இளவரசன் திருமணத்தை அடுத்து தர்மபுரியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன்-திவ்யா காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டதையடுத்து தலித் காலனிகளில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை ஆஜராகி கூறியதாவது:-

தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஐகோர்ட் நியமித்த நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை நகல்கள் வழக்கு தொடர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்படும் வீடுகள் தரமானதாக இல்லை என்றும், இந்த பணிகளை மேற்கொள்ளும் தாசில்தார் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும் மனுதாரர்கள் கடந்த முறை விசாரணையின் போது குற்றம் சுமத்தி இருந்தனர். இதற்கு விளக்கம் அளிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தற்கொலை செய்ததை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் பதட்டம் நிலவுகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் யாரும் நேற்று கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து இந்த வழக்கை 2 வாரம் தள்ளிவைத்து வரும் 19-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்