முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-சீனா இடையே ராணுவ உறவு: ஏ.கே. அந்தோணி

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜூலை.7 - இந்தியா-சீனா இடையே நெருங்கிய ராணுவ உறவு இருக்க வேண்டும் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் சீன ராணுவம் இரண்டு முறை அத்துமீறலில் ஈடுபட்டு சுமார் 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆக்கிரமிப்பு செய்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பின் காரணமாக சீன ராணுவம் பின்வாங்கியது. 

இந்தநிலையில் இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். அங்கு சீன பிரதமர் மற்றும் அமைச்சர், உயரதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பெய்ஜிங்கில் உள்ள ராணுவ பயிற்சி கழகத்திற்கும் அந்தோணி சென்றார். அப்போது சீன தேசிய ராணுவபயிற்சி கழகத்தின் அரசியல் விவகார கமிஷனரையும் சந்தித்து பேசினார்.   அவர் கூறுகையில் இந்தியா-சீனா இடையே நெருங்கிய ராணுவ உறவு இருக்க வேண்டும். இருநாடுகளின் ராணுவத்தினர்களிடையே நம்பிக்கை,மரியாதை, மதிப்பு இருந்தால் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது மிகவும் எளிதாகும். ராணுவத்தின் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை தலைமை தளபதிகளாக இருப்பவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படி நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் எல்லைப்பகுதியில் எப்போதும் அமைதி நிலவும் அமைதியை நிலவச் செய்வதும் மிகவும் எளிமையாகும் என்றார். 

ஏ.கே. அந்தோணியுடன் மும்படைகளின் உயரதிகாரிகள் அடங்கிய குழுவும் சென்றுள்ளது. பெய்ஜிங் நகரில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி கழகத்தை இவர்கள் சுற்றிப்பார்த்தனர். சீனாவில் ராணுவத்திற்கு கொடுக்கப்படும் பயிற்சி குறித்து அறிந்து அவைகளில் நல்லவைகளை எடுத்துக்கொள்ளும் நோக்கத்தில் இவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். சீனாவில் உள்ள ராணுவ பயிற்சி கழகம் மாதிரி புதுடெல்லியில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தையும் கொண்டுவர நடவடிக்கைகளை ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி விரைவாக எடுப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்