தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயார்: அனந்த்குமார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 10 - இப்போதுள்ள சூழ்நிலையில் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை சந்திக்க தயார் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஒரு வாரத்துக்குள் இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த குழுவின் கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், கட்சியின் தேர்தல் பிரச்சார குழு தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் யுக்தி குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்துக்குப் பின் கட்சியின் பொதுச் செயலாளர் அனந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

மக்களவை தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இடைத் தேர்தல் வந்தால் அதை சந்திக்கவும் நாங்கள் தயார். ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் நாட்டில் நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான யுக்தியும் செயல்திட்டமும் முடிவானது. தேர்தலுக்கு பா.ஜ.க. இரண்டு அம்ச உத்தியை வகுத்து செயல்படும். காங்கிரஸ் கட்சி ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றில் அடைந்துள்ள தோல்வி காரணமாக நாடாளுமன்றத்தை சந்திக்க விரும்பவில்லை. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடைந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கவும், தேர்தல் பிரச்சார கூட்டங்களை கவனிப்பது, மத்திய அரசு மீது புகார் பட்டியல் தயாரிப்பது போன்றவற்றுக்காகவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். கட்சியின் மூத்த தலைவர்களை கலந்து ஆலோசித்த பின் இக்குழுக்களை அமைப்பதற்கு கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்குக்கும், பிரச்சார குழுவின் தலைவர் மோடிக்கும் ஆட்சிமன்ற குழு அதிகாரம் அளித்துள்ளது. 

ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி வழங்குவோம் என்பதையும் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்பதை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்க ஆட்சி மன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டது என்றார். இதனிடையே தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த புத்த கயா நகருக்கு ராஜ்நாத்சிங்கும், அருண்ஜெட்லியும் நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: