ரூபாயின் மதிப்பு தொடர் சரிவால் காலியாகும் வேலைகள்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூலை. 10 - ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வருவதால் இந்தியாவில் திட்டங்களில் முதலீடுகள் செய்வதையும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதையும் பெரும்பாலான சர்வதேச முதலீட்டாளர்களும், முதலீட்டு நிறுவனங்களும், சர்வதேச வங்கிகளும் நிறுத்தி வருகின்றன. இதனால் முதலீட்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 200 பேரை முதலீட்டு நிறுவனங்களும், இந்தியாவில் கிளை வைத்துள்ள சர்வதேச முதலீட்டு வங்கிகளும் பணியில் இருந்து நீக்கியுள்ளன. கடந்த ஓராண்டில் 230 க்கும் மேற்பட்டோரை இந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் முன்னணி பொருளாதாரக் கல்வி நிறுவனங்களில் பயின்று இந்த நிறுவனங்களால் மிக அதிகமான ஊதியத்துக்கு பணியில் சேர்க்கப்பட்டவர்கள் ஆவர். இந்த பணி நீக்கத்துக்கு பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் தப்பவில்லை. உதாரணத்துக்கு ஐ.டி.எப்.சி கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இருந்த பிரசன்னா ஆச்சார்யா, அனுராக் குமார், சஞ்சீவ் கோஸ்வாமி, விகாஸ் தீப் ஆகியோர் ஒரே நாளில் பணியில் இருந்து விலக நேர்ந்துள்ளது. இன்வஸ்ட்மென்ட் பேங்கிங், முதலீடுகள், கேபிடல் மார்க்கெட் துறைகள் இந்திய பொருளாதார சரிவாலும் ரூபாயின் மதிப்பு சரிவாலும் படுத்த படுக்கையாக உள்ளன. இதனால் இந்தத் துறைகளும் படுத்து விட்டன. இதையடுத்து இந்தத் துறைகள் சார்ந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு உள்ளிட்ட செலவுகளைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டன. அதே போல பங்குச் சந்தைகளில் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட முடியாமல் பல நிறுவனங்கள் தவித்து வருகின்றன. 2010 ம் ஆண்டில் பங்குச் சந்தைக்குள் நுழைந்து ரூ. 38,000 கோடி திரட்டின நிறுவனங்கள். ஆனால், 2011-12 ல் பங்குச் சந்தைகள் மூலம் வெறும் ரூ. 5,966 கோடி மட்டுமே திரட்ட முடிந்துள்ளது. இதனால் பங்குச் சந்தைகளை வைத்து முக்கிய வர்த்தகத்தை நடத்தும் ஆர்.பி.எஸ், டைவா கேபிடல், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, பேங்க் ஆப் அமெரிக்கா- மெரில் லின்ஜ், டாய்ஸ் பேங்க்  ஆகிய நிறுவனங்களும் பெரும் சிக்கலில் உள்ளன. டார்கெட்டை அடைய முடியாத பல நிர்வாகிகளும் இந்த நிறுவனங்களில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: