சோலார் ஊழல்: சாண்டி பதவி விலகமாட்டார்: அந்தோணி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.10 - சோலார் ஊழல் விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலகமாட்டார் என்று மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் சோலார் கருவிகள் அமைப்பதில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று மாநில காங்கிரஸ் கூட்டணி முதல்வர் உம்மன்சாண்டி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் வலியுறுத்தி வருகிறார். இந்த பிரச்சினையால் சட்டசபையில் பல நாட்கள் கூச்சல் குழப்பம் நிலவியது. 

இந்தநிலையில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சோலார் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் முதல்வர் மாற்றப்படமாட்டார். கேரளாவில் அரசியல் நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை என்றார்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்சியில் இருந்து நீக்குவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வன்முறையை தூண்டிவிடுவதோடு வன்முறையிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போதுள்ள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. சோலார் ஊழல் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவு வெளியாகும் வரை எதிர்க்கட்சிகள் பொறுத்திருக்க வேண்டும் என்று அந்தோணி கேட்டுக்கொண்டார். வன்முறை வழியில் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை காலி செய்ய முயற்சி செய்யக்கூடாது. சோலார் ஊழல் குற்றச்சாட்டில் தலைவர்களின் குடும்பத்தினர்கள் மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் வரம்பை மீறி செயல்படுகிறார்கள். அதாவது லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டி வருகிறார்கள் என்றும் ஏ.கே. அந்தோணி மேலும் கூறினார்.

இந்த பிரச்சினையால் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தலைநகர் திருவனந்தபுரத்தில் பல இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: