ஓரினச் சேர்க்கை: ம.பி. மாஜி பா.ஜ.க. அமைச்சர் கைது

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஜூலை. 10 - வேலைக்காரருடன் ஓரினச் சேர்க்கை உறவு வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய பிரதேச மாநில முன்னாள் பாஜக நிதியமைச்சர் ராகவ்ஜி (79) நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநில மூத்த பா.ஜ.க. தலைவரும் நிதி அமைச்சருமான ராகவ்ஜியின் வீட்டில் வேலை செய்து வந்த ராஜ்குமார் டாங்கி (32) என்பவர் கடந்த வாரம் காவல் நிலையத்தில் புகார் தந்தார். அதில், எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அமைச்சர் ராகவ்ஜி கடந்த மூன்றரை ஆண்டுகளாக என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். மேலும் அவரது நண்பர்கள் இருவரும் என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

அமைச்சரின் பங்களாவில் அமைச்சர் தன் நண்பர்களுடன் தன்னுடன் உறவு கொண்டதை ரகசிய வீடியோவாகவும் ராஜ்குமார் டாங்கி எடுத்திருந்தார். இந்த ஆதாரத்தையும் அவர் போலீசாரிடம் அளித்தார். இருப்பினும் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். விவகாரம் வெளியில் வந்ததையடுத்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அமைச்சர் ராகவ்ஜியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். 

இதையடுத்து அவர் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. வில் இருந்தும் ராகவ்ஜி நீக்கப்பட்டார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க ராகவ்ஜி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து வேறு வழியின்றி தங்களது கட்சியின் மூத்த தலைவராக இருந்தவரையே பா.ஜ.க. அரசு நேற்று கைது செய்தது. இந்நிலையில் ராஜ்குமார் டாங்கியின் தந்தை உஜ்வால் டாங்கி, சகோதரர் ஹரீஷ்சிங் இருவரும், ஹபிப்கஞ்ச் மற்றும் விதிஷா போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதில், ராஜ்குமார் டாங்கியை கடந்த இரு நாட்களாக காணவில்லை என்றும் பா.ஜ.க. பிரமுகர்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: