மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கடிதம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.10 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு  எதிர்ப்பு தெரிவிக்காதது நிலைமையை  மேலும் மோசமாக்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:-

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் 21 பேரை பகிரங்கமாகவும் சட்டவிரோதமாகவும்  கடத்திச்   சென்று   காவலில் வைத்துள்ள  மற்றுமொரு கொடிய செயல்  குறித்து  உங்கள் கவனத்திற்கு   நான்   கொண்டு வர  விழைகிறேன். இராமநாதபுர   மாவட்டத்தைச்   சேர்ந்த    இந்த  21    மீனவர்கள்  6.7.2013 அன்று இரவு  IND/TN/10/MM/474, IND/TN/10/MM/302, IND/TN/11/MM/117,IND/TN/11/MM/259, IND/TN/10/MM/008  ஆகிய பதிவெண்கள் கொண்ட ஐந்து படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற போது, நடுக்கடலில் அவர்கள் அனைவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் 19.7.2013 ஆம் நாள் வரையில் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.  

இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதுமறியா மீனவர்களை நடுக்கடலில் எவ்வித காரணமுமின்றி தாக்குவது, கடத்திச் செல்வது மற்றும் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றி நான் தங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிவந்துள்ளேன்.  5.6.2013 அன்று 10 படகுகளில் சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  சட்டவிரோமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர் இவர்களில் 24 மீனவர்கள் 2.7.2013 அன்றும், எஞ்சியிருந்த 25 மீனவர்கள் 3,7,2013 அன்றும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இரண்டு படகுகளில் சென்ற மற்றுமொரு 8 மீனவர்கள் 15.6.2013 அன்று கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இந்நாள் வரையிலும் வாடிவருகின்றனர்.  இவை தவிர, ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு, 29.11.2011  ஆம் நாளிலிருந்து இலங்கை நீதித்துறை காவலில் இருந்து வருகின்றனர்.  இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் ஒரு பகுதியாக கச்சத்தீவை எனது அரசு எப்போதும் கோரி வரும் இச்சூழலில், அவர்களை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லாமல்  தடுக்கும் வகையில்  அச்சுறுத்தும் நோக்கில் ஏதுமறியாத, ஆயுதமற்ற இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், இத்தகைய கடுமையான வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இத்தகைய காரணமற்ற இலங்கை கடற்படையினரின் வன்முறை செயல்களுக்கு துரதிருஷ்டவசமாக இந்திய அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெறுமனே இருந்து வருகிறது.  இது நிலைமையை மேலும் மோசமாக்குவதோடு,  தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திற்கிடையே அதிக பதற்ற நிலையை உருவாக்கும்.

எனது 17.6.2013 ஆம் நாளிட்ட கடிதத்தில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டியுள்ளவாறு, வெளிவிவகாரத் துறை அமைச்சகம் தொடர்ந்து எதையும் பொருட்படுத்தாமல், அக்கறையின்று மெளனம் சாதித்து வருகிறது.  வேதனையான இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.  இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை அதிலும் குறிப்பாக அண்மைக் காலங்களில் கைது செய்யும் இத்தகைய எண்ணற்ற நேர்வுகளுக்கு மத்.ய அரசின் உயர் நிலை அளவில் வலுவான, ஒருங்கிணைந்த விவேகமான பதிலடி கொடுப்பது அவசியமாகும்.  எனவே, இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் ஏதுமறியா இந்திய மீனவர்கள் மீது காரணமின்றி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து அவர் வாயிலாக இலங்கை அரசுக்கு வலுவாலன ஆலோசனை வழங்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மீனவர்களை, காவலிலிருந்து உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில்  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: