மத்திய மந்திரி சசிதரூர் அலுவலகம் சூறை

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை. 11 - சோலார் பேனல் மோசடிக்கு பொறுப்பேற்று முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தினர். ஆனால் சாண்டி மறுத்து விட்டார். இதையடுத்து கேரளா முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் வன்முறை வெடித்து கம்யூனிஸ்டு தொண்டர்கள்  தாக்கப்பட்டனர். கேரள சட்டசபையில் அச்சுதானந்தன் இப்பிரச்சினையை கிளப்பினார். அப்போது சபையில் அமளி ஏற்பட்டது. 

இதையடுத்து சபாநாயகர் சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சுதானந்தன் தலைமையில் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினர் தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் பரவியதும் திருவனந்தபுரம் முழுவதும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அவர்கள் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். 

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது தடியடி கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். கம்யூனிஸ்டுகளும் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். தலைமை செயலகம் முன்பும் ஏராளமான தொண்டர்கள் கூடியதால் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். இதில் அச்சுதானந்தனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு தொண்டர்கள் கொண்டு சென்றனர். இதனையறிந்த கம்யூனிஸ்டுகள் காங்கிரசாரின் கட்அவுட்டுகளை அடித்து நொறுக்கினர். திருவனந்தபுரம் எம்.பியும், மத்திய அமைச்சருமான சசிதரூரின் அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். 

இது குறித்து சசிதரூர் கூறுகையில், கம்யூனிஸ்டுகள் எனது அலுவலகத்தை தாக்கி உள்ளனர். அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: