காவிரி மே. வாரியம் அமைக்க மனு: நாளை விசாரணை

புதன்கிழமை, 10 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 11 - காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து கர்நாடகம் மறுத்து வருவதால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை கடந்த 5.2.2007 ல் வெளியிட்டது. தீர்ப்பு விபரம் கடந்த 19.2.2013 ல் மத்திய அரசின் கெஜட்டில் வெளியானது. இதையடுத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அமலுக்கு வந்துள்ளது. இதை கண்காணிக்க காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அதிகாரி தலைவராக இருப்பார். இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில உயரதிகாரிகளும் வேளாண்மை நிபுணர்களும் இடம் பெறுவர். 

பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த குழு கூடி பிரச்சினைகள் குறித்து பேசி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் என்பது தீர்ப்பின் முக்கிய அம்சம். ஆனால் மத்திய அரசு 2 குழுக்களையும் அமைக்கவில்லை. இக்குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு இரு குழுக்களையும் அமைக்கும் வரை தற்காலிக மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே 24 ம் தேதி தற்காலிக மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் நீர் மட்டம் மிக குறைவாக இருந்த நிலையில் அந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடும்படி தமிழகம் கர்நாடகாவிடம் கேட்டது. ஆனால் கர்நாடகம் மறுத்து விட்டது. 

இந்நிலையில் ஜூன் 1 மற்றும் 12 தேதிகளில் காவிரி மேற்பார்வை குழு டெல்லியில் கூடியது. இரு கூட்டங்களிலும் கர்நாடகம் தண்ணீர் விட மறுத்து விட்டது. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட தற்காலிக குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அடித்துக் கூறியது கர்நாடகம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அமைக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு ஜூலை 1 ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி அல்தமாஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து வரும் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

எனவே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா என்பது நாளை தெரியவரும். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் காவிரி இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து டெல்டாவின் தேவையை சமாளிக்க முடியும். இந்நிலையில் வரும் 15 ம் தேதி காவிரி மேற்பார்வை குழுவின் 3 வது கூட்டம் டெல்லியில் கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும்படி தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் அலோக்ராவத் கடிதம் அனுப்பி உள்ளார். இவர் கடந்த 1 ம் தேதிதான் நீர்வள துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டத்திலும் தமிழகம் சார்பில் கடந்த மாதத்தில் தர வேண்டிய 10 டி.எம்.சி. தற்போது தர வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை தரும்படி மீண்டும் வலியுறுத்தப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: