டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் இன்று, முதல் தீர்ப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.11 - டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று முதல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பில் 17 வயது சிறுவனுக்கு 3 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி இரவில் மருத்துவ மாணவி பஸ்சில் செல்லும்போது கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் நாடே கொதித்தெழுந்தது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்தியா கேட்டில் ஆண்களும் பெண்களும் திரண்டு டெல்லி நகரை நிலை குலைய செய்தனர். இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது  இந்த சிறுவனுக்கு 17 வயதுதான். அதனால் அவன், சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான் மற்றும் 5 பேர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 5 பேர்களில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேர் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவன் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதனையொட்டி இந்த கற்பழிப்பு வழக்கில் இன்று முதல் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. தீர்ப்பில் சிறுவனக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த 3 ஆண்டு தண்டனையில் அந்த சிறுவன் இதுவரை சிறையில் இருந்த காலம் கழிக்கப்படும். ஆனால் சிறுவனுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் கோரி வருகின்றனர். அதனால் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கும்பட்சத்தில் மேலும் மக்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஏற்கனவே அந்த 5 பேர்களுடன் சேர்ந்து சிறுவனையும் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவி குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். நீதி முன்பு எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். இந்த வழக்கில் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை பயன்படுத்தி அந்த சிறுவன் தப்ப முயற்சி செய்கிறான் என்று கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறினார். மற்ற 4 பேர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது சந்தேகமாக இருந்தாலும் இன்னும் பல மாதங்களுக்குள் இந்த விசாரணை முடிந்துவிடும் என்று தெரிகிறது. மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதால் அந்த 4 பேர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை போதுமானது என்று அவன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குமார் ஆஸ்தானா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: