பா.ஜ.க.வில் மீண்டும் சேருவது உரிய நேரத்தில் முடிவு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூலை.12 - பாரதிய ஜனதாவில் மீண்டும் சேருவது பற்றி உரியநேரத்தில் உரிய முடிவை தாம் எடுக்கப்போவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில பாரதிய ஜனதா முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. பாரதிய ஜனதா அரசின் முதல்வராக இவர் இருந்த காலத்தில் இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டரை பா.ஜ.க. மேலிடம் முதல்வராக்கியது. பதவி இழந்த எடியூரப்பா ஷெட்டரை கவிழ்க்க எவ்வளவோ முயன்றார். ஆனால் அது பலிக்காமல் போகவே ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியை துவக்கினார். பின்னர் சமீபத்தில் இம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலை இவரது கட்சி சந்தித்தது. இந்த தேர்தலில் எடியூரப்பா கட்சி 10 சதவீத வாக்குகளை கைப்பற்றியது. இதனால் ஓட்டுக்கள் பிரிந்து பா.ஜ.க. தோல்வி அடைந்து காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு எடியூரப்பாவை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க.முயற்சித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பா.ஜ.கட்சியில் ஒரு பிரிவினரும் எடியூரப்பா கட்சியில் ஒரு பிரிவினரும் எடியூரப்பாவை பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடியூரப்பா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், பா.ஜ.க.வுக்கு திரும்புவதில் தமக்கு வெறுப்பு இல்லை என்பதை சூசகமாக சுட்டிக்காட்டினார். பா.ஜ.க.வுக்கு திரும்புவது பற்றி தாமும் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் சிலரும் விவாதித்ததாக முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். மேலும் பா.ஜ.க.வில் சேருவது பற்றி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுப்பேன் என்றும் அவர் கூறினார். பா.ஜ.க.தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் சில தலைவர்களிடம் இருந்து தமக்கு சில தகவல்கள் ஏற்கனவே வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருந்தாலும் நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. எனது சகாக்களுடன் ஆலோசித்துவிட்டு ஒரு முடிவு எடுப்பேன் என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில் யார் முதலில் முயற்சி எடுத்தார்கள் என்ற கேள்வி தேவையில்லை. காங்கிரசில் சேருவேன் என்ற பேச்சுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு திரும்புவதில் மகிழ்ச்சியா என்று கேட்டபோது நான் இன்னும் முடிவுக்கே வரவில்லையே என்று கூறிய இடியூரப்பா,பா.ஜ.க.விடம் இருந்து என்னை சேர்ப்பது பற்றி முறைப்படி அழைப்பு வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட முறையில் நான் முடிவு எடுக்க முடியாது கட்சி முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 28 இடங்களில் 18 இடங்களை பா.ஜ.க.கைப்பற்றியது. அதேபோல் நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் என்றார் எடியூரப்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்: