டெல்லி கற்பழிப்பு வழக்கு: சிறுவன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.12 - டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவனான சிறுவன் மீதான விசாரணை முடிந்தது. தீர்ப்பு வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம் சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சம்பவம் நடந்தபோது ஒருவனுக்கு 17 வயதுதான். அதனால் அவன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை. அந்த சிறுவன் சிறார் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான் மற்ற 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். சிறுவன் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு வருகின்ற 25-ம் தேதி வழங்கப்படும் என்று சிறார் சீர்திருத்த கோர்ட்டு அறிவித்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் மாதவ் குராணா தெரிவித்தார். சிறுவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு சிறார் சீர்திருத்த சட்டப்படி அதிகப்பட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. சிறுவன் மீது கும்பலாக சேர்ந்து கற்பழிப்பத்தது, கொலை, கடத்தல், இயற்கைக்கு மாறான குற்றம் புரிதல், கொலை செய்ய முயற்சி, கொள்ளை, ஆதாரங்களை அழித்தல், சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறுவன் மீது விசாரணை நடந்தபோது அரசு தரப்பு சாட்சிகள் 6 பேர்களின் வாக்குமூலம் பதவி செய்யப்பட்டது. இதில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் நண்பனின் சாட்சியமும் அடங்கும். தச்சு தொழிலாளி ஒருவரின் சாட்சியமும் பதவி செய்யப்பட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது அவர், பஸ்சில் இருந்தார். அப்போது அவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை அந்த 6 பேரும் கொள்ளையடித்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுவன் சார்பாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில் இந்த வழக்கில் சிறுவனை சேர்ப்பதற்கு எந்தவித மருத்துவ சான்றுகள் எதுவும் இல்லை. பஸ்சில் சிறுவன் இருந்ததற்கு ஆதாரமாக அந்த சிறுவனுடைய கைரேகை எதுவும் பதிவாகவில்லை. சிறார் நீதிமன்றமானது அந்த சிறுவனின் வாக்குமூலத்தை பதவி செய்தபோது அவன் ஒரு அப்பாவி என்பது தெரியவந்தது. அதனால் அந்த 6 பேர்களில் சிறுவன் மிகப்பெரிய கொடூரமானவன் என்று போலீசார் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: