உ.பி.யில் சாதி அடிப்படையில் பேரணி நடத்த ஐகோர்ட்டு தடை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,ஜூலை.12 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதி அடிப்படையில் பேரணி நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல் கமிஷன், 4 அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நாட்டில் புற்றீசல் மாதிரி அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன. சாதி அடைப்படையில் ஏராளமான அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் அமைதி குலைந்து வருவதோடு பிரிவினைக்கும் வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் சாதி அடிப்படையில் பேரணிகள் நடத்த புகழ்பெற்ற அலாகாபாத் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 

அலகாபாத் நகரை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மோதிலால் யாதவ் என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு இந்த துணிச்சலான தடையை விதித்துள்ளது. நீதிபதிகள் உமா நாத் சிங், மகேந்திர தயாள் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசு, தேர்தல் கமிஷன், 4 அரசியல் கட்சிகளுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர். சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 40 மாவட்டங்களில் பிராமணர்கள் பேரணியை நடத்தியது. மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஒரு பேரணியிலும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதியும் கலந்துகொண்டு பேசினார். இந்த பின்னணியில்தான் வழக்கறிஞர் மோதிலால் யாதவ் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார். காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கறிஞர் மோதிலால் யாதவ் தாக்கல் செய்த மனுவில் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள் அதிக அளவு நடந்து வருகிறது. பிராமணர், சத்திரியர், வைஷ்யர் என்ற வர்ணாசிரம அடிப்படையில் அரசியல் கட்சிகள் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மாதிரியான பேரணிகள் மாநிலத்தில் சமூக ஒற்றுமையையும் இணக்கத்தையும் கெடுத்து வருகிறது. மேலும் இந்த மாதிரியான பேரணிகள் நடப்பது சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானவைகளாகும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: