விமானத்தை தடுத்ததற்காக மன்னிப்பு கேட்டது ஸ்பெயின்

July 16, 2013 உலகம்
EVo Morales - President of Bolivia(C)

 

லா பாஸ், ஜூலை. 17 - பொலிவிய அதிபர் இவோ மாரல்ஸ் பயணித்த விமானம் தனது வான் எல்லையைக் கடப்பதற்கு அனுமதி தர மறுத்ததற்காக அந்த நாட்டிடம் ஸ்பெயின் நாடு மன்னிப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை ஸ்பெயின் தூதர் ஏஞ்செல் வாஸ்கியூஸ், பொலிவிய வெளியுறவு அமைச்சகத்திடம் வழங்கினார்.

மேலும் அவர் இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொலிவிய அதிபருக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஸ்பெயின் அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது என்று கூறியிருந்தார்.

ரஷ்யாவில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பொலிவிய அதிபர், திரும்பும்போது ஸ்பெயின் வான்வெளிப் பகுதியைக் கடக்கவிருந்தது அதிபரின் விமானம். ஆனால் அதற்குரிய அனுமதியை ஸ்பெயின் அரசு தரவில்லை. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதேபோல பிரான்சு, இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகளும் விமானத்தை அனுமதிக்க மறுத்தன. இதையடுத்து வேறு வழியில்லாமல் வியன்னா திரும்பி வேறு மார்க்கமாக பொலிவிய அதிபர் பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டது.

ஸ்னோடென், பொலிவிய அதிபரின் விமானத்தில் இருக்கலாம் என்று வந்த செய்தியைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் எடுத்தன. இதற்கு பொலிவியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடுகள் பணிந்து விட்டதாக அதிபர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான் தனது செயலுக்கு ஸ்பெயின் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.