டெல்லியில் கும்பலிடமிருந்து 99 துப்பாக்கிகள் பறிமுதல்

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.18 - டெல்லியில், பல்வேறு குற்றப் பின்னணியுள்ள கிரிமினல் கும்பலிடமிருந்து 99 துப்பாக்கிகளை டெல்லி போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சோனியா விகார் பகுதியில் மிஸ்ரா, பிரோஸ் ஆலம் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சோதனை செய்தபோது பயங்கர ஆயுதங்கள் அவர்களை பயன்படுத்திய காரில் மறைத்து வைத்திருந்த தெரியவந்தது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

 காரின் விளக்குப் பகுதியில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பீகார் மாநிலத்தில் உள்ள முங்கர் மாவட்டத்தில் இந்த பயங்கர  ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் முங்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

முங்கர் மாவட்டத்தில் அதி நவீனமான பயங்கர ஆயுதங்கள் அனுமதி இல்லாதஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இந்தியன் முஜாகுதீன் தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

புனேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து முங்கர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட பயங்கர ஆயுதங்களை புலன்விசாரணை நடத்தும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  அந்த கும்பலிடம்  தீவிரமாக விசாரித்தபோது, இந்த பயங்கர ஆயுதங்களை முங்கர் மாவட்டத்திலிருந்து வாங்கி வந்தோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் இத்தகைய முங்கர் மாவட்ட தயாரிப்பு ஆயுதங்கள் நவீனமயமான ஆயுதங்களை விட மிகச் சிறந்த முறையில் நன்றாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டு இவர்களிடமிருந்து 130 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 60 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

முங்கர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் இந்த வகையான துப்பாக்கிகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகின்றன. இந்த துப்பாக்கிகளுக்கு கர்நாடகம், மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: