என்.எல்.சி. பங்கு விற்பனை அடுத்தமாதம் அமலுக்கு வரும்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.19 - தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நடத்தினர். என்.எல்.சி. பங்கு விற்பனை, அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்று, பங்கு விற்பனைத்துறை முடிவு செய்து, அதற்கு மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் கடந்த மாதத்தில் வழங்கப்பட்டது.    

நிறுவனம் சார் ஒதுக்கீடு (ஐ.பி.பி.) திட்டத்தின் கீழ், பொது மக்களின் பங்கு குறைந்த பட்சம் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையினால், தற்போது 5 சதவீதத்துக்குப் பதிலாக 3.56 சதவீதம் அல்லது 5.58 கோடி என்.எல்.சி. பங்குகளை மட்டும் விற்பனை செய்யும் முடிவுக்கு பங்கு விற்பனைத்துறை வந்துள்ளது.

மத்திய  நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், 3.56 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் பங்கு விற்பனைத் துறை செயலாளர் ரவி மாத்தூர் இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி.யில் நடைபெற்றுவந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.

இருந்த போதிலும், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்.எல்.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் நடைமுறை பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

என்.எல்.சி.யில் தற்போது மத்திய அரசுக்கு 93.56 சதவீத பங்குகள் உள்ளன. 10 சதவீத பங்குகள் பொது மக்களிடம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 3.56 சதவீத பங்குகள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: