விப்ரோ நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை. 21 - பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். 

சர்ஜாபூர் ரோட்டில் உள்ள விப்ரோ நிறுவன அலுவலகத்துக்கு நேற்று பிற்பகலில் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், விப்ரோ நிறுவனத்தை சுற்றி 19 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் குண்டுகள் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விப்ரோ நிறுவன அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. 

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் அங்கு வந்தனர். ஊழியர்களை உடனடியாக வெளியேற்றிய காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்குள்ள ஒவ்வொரு அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் விப்ரோ நிறுவனத்திற்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: