மேலிடம் கூறினால் ராஜினாமா செய்ய தயார்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை. 19 - சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கேரள தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதாநாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மோசடிக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் மந்திரிகள் சிலரும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து இந்த மோசடிக்கு பொறுப்பேற்று உம்மன் சாண்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நிதி அமைச்சரும், கேரள காங்கிரஸ்(எம்.) கட்சி தலைவருமான கே.எம். மானியை முதல் மந்திரியாக்க முயற்சி நடந்து வருவதாகவும் கேரள அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. 

இந்த நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சோலார் பேனல் மோசடி வழக்கை போலீசார் நடுநிலைமையோடு விசாரித்து வருகிறார்கள். போலீசார் விசாரணையில் அரசியல் தலையீடு ஏதும் கிடையாது. போலீசார் விசாரணையில் குறைகள் ஏதும் இருந்தால் அது பற்றி தாராளமாக சுட்டிக் காட்டலாம். அந்த புகாரில் உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 

ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எனது தலைமையிலான அரசை கவிழ்த்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது சரிதானா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனது ஆட்சியை குறுக்கு வழியில் கலைத்து விட முடியாது. என்னை கட்சி மேலிடம் முதல்வராக நியமித்தது. கட்சி மேலிடம் கூறினால் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: