குழந்தைகள் பலி: பா.ஜ.க. - லல்லு கட்சி மீது குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 24 - பீகார் மாநிலத்தில் மதிய உணவில் பூச்சிக்கொல்லி கலந்து 23 குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு அரசியல் சதியே காரணம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பாட்னாவில் லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களிடையே நிதிஷ்குமார் பேசுகையில், கடந்த வாரம் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலியானது தொடர்பான தடவியல் அறிக்கையில் பூச்சிக்கொல்லி கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சதி. 

புத்த கயா மற்றும் மதிய உணவு மரணங்களைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ரகசியமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரண்டு சம்பவங்களின் போதும் இரண்டு கட்சிகளுமே முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. பீகாரில் ஆட்சியை இழந்த விரக்தியில் பா.ஜ.க. இருந்து வருகிறது. இதனால் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து எனது அரசை நிலைகுலைய வைக்க தீவிரம் காட்டுகின்றனர். என்னுடைய பொறுமையை மிகவும் அந்த கட்சிகள் சோதிக்கின்றன. ஆனால் நான் எனது பாதையில் இருந்து விலகப் போவது இல்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: