முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 24 - கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான 2 நாள் கருத்தரங்கை ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். கட்சியின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தங்களுடைய புகழையும் தானாக வளர்த்துக் கொள்ள முடியும். எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் கட்சியினர் அனைவரும் ஒருமித்த குரலில் பேச வேண்டும். கட்சியை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும். அரசியல் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும். 

இதற்காக பேஸ்புக், டுவிட்டர் மற்றும் லாட்ஸ்ஆப் ஆகிய சமூக இணையதளங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களை கவர முடியும். எந்த ஒரு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் சொந்த கருத்து இருக்கலாம். ஆனால் கட்சி என்று வரும் போது கொள்கைகளுக்கு உட்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காந்தியின் கட்சியை சேர்ந்த நாம் மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் கண்ணியமாக பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள், நிர்வாகிகள், கட்சியின் இளம் மற்றும் மூத்த நிர்வாகிகள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பது மற்றும் விவாதங்களில் பங்கேற்பது குறித்து மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் மணீஷ்திவாரி பயிற்சி அளிக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்