முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? பா.ஜ.க. சவால்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், ஜூலை. 28 - காங்கிரஸ் கட்சியால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சவால் விடுத்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அமெரிக்க தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய போது, காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங், ப. சிதம்பரம் மற்றும் சிலர் பிரதமர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் அடுத்த பிரதமர் என்பதில் அக்கட்சி தலைவர்கள் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. 

எங்கள் கட்சி பிரச்சார குழுவை அமைப்பதில் ஜனநாயக ரீதியான கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால் இது போன்ற நடைமுறைகள் காங்கிரஸ் கட்சியில் இல்லை. பா.ஜ.க. தரப்பில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. பா.ஜ.க. தரப்பில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான வரைவு அறிக்கை நிபுணர்கள் மக்கள் கருத்தை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இது வெளியிடப்படும். 

இந்திய பொருளாதார நிலையை பொருத்தமட்டில் கவலைப்படும் விதத்திலும் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையிலும் இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்ற 1999 - 2004 ஆண்டுகளில்தான் இந்திய பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் வெற்றி பயணம் மீண்டும் தொடங்கி விடும். உலகமே குஜராத்தின் வளர்ச்சியை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. நாட்டுக்கு காங்கிரஸ் அழிவும், பா.ஜ.க. வால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் நாட்டில் 6.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 27 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்பட்டன. அடுத்து வரும் பா.ஜ.க அரசு முதலாளித்துவ அல்லது சோசலிச அரசாக இருக்காது. இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ப இது தேசிய தலை சார்ந்த அரசாக இருக்கும் என்றார் ராஜ்நாத்சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்