முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித் தெலுங்கானா குறித்து 5-ம் தேதிக்குள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 29 - தனித் தெலுங்கானா மாநிலம் குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தனது முடிவை வரும் 5 ம் தேதிக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அம்மாநிலத்தில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டி.ஆர்.எஸ். எனப்படும் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி இந்த போராட்டத்தை நடத்தி வருகிறது. இதன் தலைவராக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். இவரது தலைமையில்தான் துவக்கத்தில் போராட்டங்கள் வெடித்தன. பிறகு இந்த போராட்டத்தில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் குதித்தனர். 

இந்த மாணவர் போராட்டம் பல கட்டங்களில் வன்முறையாக வெடித்து அதில் பல மாணவர்கள் தங்கள் இன்னுயிரையும் நீத்தனர். தொடர்ந்து இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் உயர்மட்ட குழு டெல்லியில் கூடி தனித் தெலுங்கானா பற்றி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது பற்றி ஒரு தெளிவான முடிவை மத்திய அரசு எடுத்ததாக தெரிகிறது. 

இந்த விஷயம் வெளியானதும் ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக ஆந்திர அமைச்சர்கள், எம்.பி.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் இந்த முயற்சிக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு தற்போது இந்த விஷயத்தில் ஒரு உறுதியான முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அனேகமாக வரும் 5 ம் தேதிக்குள் தனித் தெலுங்கானா மாநிலம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்