முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி மீது குற்றப்பத்திரிகை: அமலாக்கத் துறை

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 31 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் மீது பண மோசடி தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து மத்திய அமலாக்கத் துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அலைக்கற்றை வழக்கில் நிதி முறைகேடு மோசடி தொடர்பான புகார்களை மத்திய அமலாக்க துறை தனியாக விசாரித்து வருகிறது. அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனம் மூலம் தி.மு.க. ஆதரவு கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட ரூ. 200 கோடியை லஞ்சம் என்று கூறி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கில் கனிமொழி, கலைஞர் டி.வியின் முன்னாள் இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹிக் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கரீம் மொரானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் கலைஞர் டி.வி. வளர்ச்சிக்காக பல்வேறு நிறுவனங்கள் மூலம் கடனாக ரூ. 200 கோடி பெற்றதாகவும், பின்னர் தொழில் திட்டம் சரியாக அமையாததால் வாங்கிய பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பி கொடுத்து விட்டதாக கலைஞர் டி.வி. கூறியது. 

இப்பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது இம்மாத தொடக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அமலாக்கத் துறை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2007, 2008 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் விவகாரத்தில் 2009 ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட பண மோசடி தடுப்பு சட்ட பிரிவுகளின் படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்று அமலாக்கத் துறையிடம் மத்திய கண்காணிப்பு ஆணையம் கேள்வி எழுப்பியது. 

இது தொடர்பாக அமலாக்க துறைக்கு மத்திய சட்டத் துறை கடந்த வாரம் தெரிவித்த கருத்தில் 2010 ம் ஆண்டு ஹரிநாராயண் ராய் என்பவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி 2009 ம் ஆண்டில் பணி மோசடி தடுப்பு சட்டம் திருத்தப்பட்டாலும், சட்டம் திருத்தப்பட்ட நாளுக்கு முந்தைய காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கும் அச்சட்ட பிரிவுகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சட்ட திருத்தத்தின் மூன்றாவது பிரிவில் பண மோசடியில் ஒருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் இருந்தாலோ அல்லது பண மோசடி செய்து அதை நியாயமான வழியில் சேர்த்ததாக நிரூபிக்க முயன்றாலோ அது குற்றமாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது பண மோசடி தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய அமலாக்கத் துறை விரைவில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்