முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒபாமா அஞ்சலி

சனிக்கிழமை, 7 மே 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மே 7 - கடந்த 2001 ம் ஆண்டு நியூயார்க்கில் இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களுக்கு நேற்று அதே இடத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்லேடன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நடந்த இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் கலந்துகொண்டார். 

கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதவிட்டு மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாதியும், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான ஒசாமா பின்லேடன்தான் முக்கிய காரணம் என்பதை அறிந்த அமெரிக்கா, அவன் தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது கடந்த 2002 ம் ஆண்டு ராணுவ தாக்குதலை நடத்தியது. ஆனால் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டு காலமாக பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவ வீரர்கள் இரவு நேரத்தில் ஹெலிகாப்டரில் சென்று அவன் தங்கியிருந்த சொகுசு மாளிகையை முற்றுகையிட்டு அவனை சுட்டுக் கொன்றனர். பின்லேடன் பலியானது அமெரிக்காவுக்கு கிடைத்த நீதியின் வெற்றி என்று ஒபாமா கூறியிருந்தார். பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் இருந்த அதே இடத்தில் நேற்று நினைவஞ்சலி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2001ம் ஆண்டு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். மெழுகுவர்த்தி ஏற்றி இவர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பாரக் ஒபாமா, தீவிரவாதிகளை நீதியின் முன் கொண்டுவந்து  நிறுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா தொய்வில்லாத அக்கறையுடன் இருப்பதை அமெரிக்க வீரர்கள் பின்லேடனை சுட்டுக் கொன்றது எடுத்துக்காட்டுகிறது என்றார். 2001 ல் நடந்த தாக்குதலின்போது இரட்டை கோபுரத்தில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு படையைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, அல்கொய்தா தலைவர்  பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்கே ஒரு நல்ல செய்தி என்றும் ஒபாமா குறிப்பிட்டார். இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரவுண்ட் ஜீரோ கட்டிடத்திற்கு பாரக் ஒபாமா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்